cabinet decisionநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது, நுவரரெலியா மாவட்டத்தின் நான்கு புதிய பிரதேச சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோர்வுட், மஸ்கெலியா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேச சபைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மேலும் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளது. இப்பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் இங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை எதிர்த்து கினிகத்தேனை நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கினிகத்தேனை நகரில் முன்னெடுப்பதற்கு ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. நகரில் வாகனங்களுக்கு இடையூறு இடம்பெறாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமலும் ஆர்ப்பாட்டத்தை முனனெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். அம்பகமுவ பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மேலும் இரண்டு பிரதேச சபைகளுக்கு எல்லைகள் பிரிக்கப்படும் போது, இதுவரை இப்பகுதியில் வாழ்ந்து வரும் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்பட இடம் இருப்பதாகவும், சிவனொளிபாதமலை ஆலயம் தமிழர் பிரதேசத்திற்கு செல்லும் நிலை உருவாகுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தெரிவித்துள்ளார்.