dffgமாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன 8 பேரில் இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் வரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கை வரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன.

இன்னும் ஒருவரது சடலம் தற்போது வரை தேடப்பட்டு வருகிறது. காலநிலை காரணமாக சடலத்தை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லக்கலைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு குடும்ப அங்கத்தவர்கள் லக்கலை தெல்கமு ஆற்றில் நீராடியுள்ளனர். அவ்வேளையில் திடீர் என வெள்ள நீர் ஆற்றுடன் கலந்ததால் மேற்படி 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இறுதியாக 4 வயது சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக லக்கலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.ஜி. அமரசிங்க தெரிவித்தார்.

தெல்கமு ஓயா ஒரு பகுதியான வெத்ததாபெனி எல்ல என்ற இடத்தில் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 12 பேர் நீராடியுள்ளனர். அதில் 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நால்வர் உயிர் தப்பியுள்ளனர். இறுதியாகக் கண்டெடுக்கப்பட்ட சடலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து நான்கு கிலோ மீற்றருக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நக்கிள்ஸ் மலைத் தொடருடன் தொடர்புபட்ட சிற்றாற்றில் மழைகாலங்களில் இவ்வாறு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்நிலையிலேயே நேற்றைய தினமும் இவ்வாறு மழை பெய்துள்ள நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 38 வயது மற்றும் 59 வயதான இரண்டு பெண்களும், 40 மற்றும் 38 வயதான ஆண்களும், இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.