வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில வணக்கஸ்தலங்களில் பணம் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் நேற்று இரவு அடையாளந் தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த தங்கச்சங்கிலியும், பணமும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் உண்டியல் அடையாளந் தெரியாதோரால் எடுத்துச் செல்லப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பள்ளிவாசலில் தங்கியிருந்த யாத்திரிகர்களின் பணப்பைகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.