மனுஸ் அகதிகள் முகாம் தொடர்பிலான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பென் லோமாய் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த முகாம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், இது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அகதிகள், விசாரணைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினாலேயே இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆயினும் பப்புவா நியுகினி நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், உண்மையில் அகதிகளுக்கு பொறுப்பாளி யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவே அகதிகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று நியுகினி நாட்டின் அரசத் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தநிலையில் குறித்த முகாமிற்கு மீண்டும் அடிப்படை வசதிகளை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து இன்று அந்த நாட்டின் நீதிமன்றம் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.