batti-gsமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கிராம சேவகர்கள் இன்மையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறத்தை அண்டிய பகுதிகளிலும் சில கிராமப்புறங்களிலும் இன்று பல கிராம சேவகர் அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. மாவட்டத்திலுள்ள 343 கிராம சேவகர் பிரிவுகளில் 235 பிரிவுகளில் கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், 108 கிராம சேவகர் பிரிவுகளில் உதவி கிராம சேவகர்களே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த அலுவலகங்களில் பதில் கடமையாளரென வேறொரு கிராமசேவகரின் பெயர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போதும், பதில் கிராம சேவகரைக் கூட காண முடிவதில்லையென மக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல பகுதிகளில் இதுவரை காலமும் பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஒரு நிரந்தர கிராம சேவகர் கூட நியமிக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வாகரை வடக்கு, கிரான் தெற்கு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை வடக்கு, தென்மேற்கு, பட்டிப்பளை போன்ற பல பகுதிகளில் இதுவரை காலமும் கிராம சேவகர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் பதில் கிராமசேவகரினால் எவ்வித சேவைகளையும் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், கிராம சேவகர்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.