2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று மாலை 3 மணிக்கு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்றதன் பின்னர் முன்வைக்கப்படவுள்ள முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதேபோல, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மூன்றாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுகின்றது. இலங்கையின் 21 ஆவது நிதி அமைச்சரால் சமர்பிக்கப்படவுள்ள 72 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம் ஒக்டோம்பர் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவினால் ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்பிக்கப்பட்டிருந்து.
அதற்கமைய, அடுத்த வருடத்திற்கான மொத்த செலவு 3982 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் கடந்த வருடத்திற்கான செலவுடன் ஒப்பிடும் போது 1259 பில்லியன் ரூபாவால் 2018 ஆம் ஆண்டுக்கான செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 46 வீத அதிகரிப்பாகும். 2018 ஆம் ஆண்டுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த வருமானம் 2175 பில்லியன் உன மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய வரவு செலவுத் திட்ட குறைநிரப்பிற்கான 1807 பில்லியன் ரூபா நிதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி, பாதுகாப்பு அமைச்சிற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாதுகாப்பு அமைச்சிற்காக 290.7 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டதின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 227.57 பில்லியன் ரூபாவும், உயர்கல்விஅமைச்சுக்கு 182.75பில்லியனும், கல்வி அமைச்சுக்கு 102.88 பில்லியன் ரூபாவும் ஒதுக்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்காக 178 .39 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதிக்காக 9.98 பில்லியன் ரூபாவும், பிரதமருக்காக 1.77 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்ப்பட்டுள்ளது.