யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீள விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
12 மனுக்களில் 9 பேரின் மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அந்த 9 மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரணையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.தன்னில் சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இவ் ஆட்கொணர்வு மனுவில் சட்டத்தரணி குருபரன் மனுத் தொடர்பாக விவாதம் செய்திருந்தார். இதன்படி அவ் ஆட்கொணர்வு மனுவில், யாழ்ப்பாணம் புலிகளது கட்டுப்பாட்டில் இருந்தபோது ஒப்ரேசன் ரிவிரெஸ ஊடாக யாழ் முழுவதும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அதன்போது யாழிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்தார்கள். இதன்போது சாவகச்சேரி நாவற்குழி அரியாலை பகுதிகளில் இராணுவத்தால் கடத்தப்பட்டு இராணுவத்தாலேயே இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.