geetha piyasena gamageவெற்றிடமான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் நிலவும் வெற்றிடம் குறித்து சபாநாயகர் நேற்று சபையில் தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், இன்றுகாலை கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பியசேன கமகே பதவியேற்றதுடன், அவர் ஆளுங்கட்சியின் வரிசையில் அமர்ந்ததாக பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி அறிவித்திருந்தது. கீதா குமாரசிங்க 2015 ஆம் ஆண்டு காலி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அவர் சுவிட்ஸர்லாந்தின் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளமையினால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். கடந்த பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் விருப்புவாக்கு பட்டியலில் கீதா குமாரசிங்கவிற்கு அடுத்தப்படியாக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பியசேன கமகே இந்த வழக்கின் பங்காளராக செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.