மதுபோதையில் வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் வீதியில் விழுந்த போது, முச்சக்கரவண்டி மோதியதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேத்தைச் சேர்ந்த 54 வயதுடைய முத்துதம்பி துரைராஜசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் உயிரிழந்தவரும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் நேற்று இரவு 8.00 மணியளவில் வௌ;வேறாக மது அருந்த சென்றுள்ளனர். இந்நிலையில் மதுபானசாலையில் வைத்து இருவருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஒருவர் மதுபானசாலையில் இருந்து வெளியேறி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியான புதுக்குடியிருப்பு பகுதி வீதியில் சோளம் விற்பனை நிலையத்துக்கு அருகில் நின்றிருந்த போது, மற்றைய நபரும் அங்கு வந்ததையடுத்து மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் மற்றொருவரை தள்ளிவிட்டதையடுத்து அவர் பாதையில் விழுந்த நிலையில், மட்டக்களப்பை நோக்கி சென்ற முச்சக்கர வண்டிமீது மோதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த நபரை தள்ளிவிட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 35 வயதுடைய நபரையும் முச்சக்கர வண்டி சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொள்கின்றனர்.