பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அண்மையில் குறித்த மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கினை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் ஒரு சாட்சியாளர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். ஏனைய சாட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த மனு இம்மாதம் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.