தெஹிவளை பகுதியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ், கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்கவை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார். சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பிறப்பித்த குறித்த உத்தரவில், டீ.கே.பி. தஸநாயக்கவை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அங்கு அவருக்கு சிகிச்சை தேவைப்படின் சிறைச்சலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டிய நீதிவான், அதற்கு அப்பால் சிகிச்சை தேவைப்படின் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத் தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது கடந்த இரு வழக்கு விசாரணைத் தினங்களில் மன்றில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் விசேட உத்தரவொன்றினை நீதிவான் லங்கா ஜயரத்ன அறிவித்தார்.
‘ இந்த வழக்கின் 7 ஆவது சந்தேக நபரான கொமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்க கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவது தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பிலும் மன்றில் ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நான் விடயங்களை ஆராய்ந்து அவதானம் செலுத்தினேன்.
சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவே தஸநாயக்க தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அங்கிருந்து விசேட வைத்திய சிகிச்சைகளுக்காக கடற்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் சிறைச்சாலை தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தஸநாயக்கவின் உண்மையான நோய் நிலைமை தொடர்பில் நான் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையைக் கோரினேன். சட்ட வைத்திய அதிகாரி, மேலும் விசேட வைத்திய நிபுணர்கள் சிலரின் அறிக்கைகளைப் பெற்று இறுதி அறிக்கையை எனக்கு சமர்ப்பித்தார்.
அதில் தஸநாயக்கவுக்கு எந்த நோய் நிலைமைகளும் இல்லை எனவும் அவர் விசாரணைகளுக்கு முகம்கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டம் என்ன கூறுகிறது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 69 (1) ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கைதி ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற முடியும். மாற்றமாக அங்கு உரிய சிகிச்சைகள் இல்லாதவிடத்து அரச வைத்தியசாலை ஒன்றிலேயே சிகிச்சைப் பெறவேண்டும்.
கடற்படை வைத்தியசாலை அரசாங்கத்தின் கீழ் இருந்தாலும், அது பொது மக்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமல்ல. அது மட்டுப்படுத்தப்பட்டது. எனவே அரச வைத்தியசாலை என கூறும் போது அங்கு பொது மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படல் வேண்டும். சந்தேக நபர் கடற்படை வீரர் என்ற ரீதியில் கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற உரிமை உள்ள போதும், நீதிமன்றைப் பொறுத்தவரை அவர் சந்தேக நபரேயாவார். எனவே ஒரு சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளையே நீதிமன்றம் முன்னெடுக்கும் என்றார்.