உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தினம் குறித்து தீர்மானம் எடுக்க இன்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு கூடுகின்றது.
இன்று வியாழக்கிழமை கூடவுள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் குறித்த திகதியை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்குள்ளான திகதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்த வர்த்தமானியில் 4 ஆயிரத்து 840 தொகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் 341 உள்ளூராட்சிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்காக 8 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆகவே புதிய தேர்தல் முறையூடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட ஆறு உள்ளூராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அகரபதன, கொட்டகல, மஸ்கெலிய, நோர்வூட், பொலனறுவை ஆகிய பிரதேச சபைளும் பொலனறுவை மாநாகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது.