முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு இந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக 608 வீடுகள் வழங்கப்பட்டு, அதனுடைய வேலைகள் நடைபெற்று வருவதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச்செலயத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, குறித்த மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் ஊடாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்த போதும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மீள்குடியேற்ற அமைச்சினூடாக 608 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 32 கிராம அலுவலர் பிரிவுகளில் 205 பயனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 11 கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 201 பயனாளிகளுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 27 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 103 பயனாளிகளுக்கும்,
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 17 கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 36 பயனாளிகளுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 11 கிராம அலுவலர் பிரிவுகளில் தெரவு செய்யப்பட்ட 33 பயனாளிகளுக்கும், வெலிஓயா பிரதேசத்தில் 7 கிராம அலுவலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்குமாக 608 வீடுகள் வழங்கப்பட்டு இதில் 19 வீடுகளின் வேலைகள் நிறைவடைந்துள்ளன. அத்துடன், வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக 487.20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதுடன், இதில் 361.52 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் 334.06 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டுத்திட்டப் பயனாளிகள் தொடர்பில் பெண் தலைமைத்துவக் குடும்ங்கள் மாற்றுத்திறனாளிகள் கடும் பாதிப்பிற்குட்பட்டவர்கள், இந்தியாவில் இருந்து மீளத் திரும்பியோர் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.