swordயாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் சங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதற்கமைய, பருத்தித்துறை – கொட்டடி மற்றும் வளலாய் – அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி அறுப்புகளுடன், இவ்வணிக்கு நேரடி தொடர்புகளிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது. உடுப்பிட்டிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றையடுத்தே, இக்குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து, இக்குழுவைச் சேர்ந்த நபரொருவர் கைதாகியுள்ளார்.

இக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, தாரா குழு எனும் கொள்ளை கும்பல் அகப்பட்டுள்ளது. இக்கும்பலின் முக்கிய சந்தேகநபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே பருத்தித்துறை பகுதியில் முன்னதாக நடைபெற்ற சில கொள்ளைகளின் போது அரங்கேற்றப்பட்ட கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில், இக்குழு மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இதேவேளை யாழ். சங்குவேலியில் வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட நபர், செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கிரிவலம் என்றழைக்கப்படுபவர் என்றும் இவர், ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் பிணையில் வந்ததையடுத்தே, அவரது தலைமையில், சங்குவேலி வாள்வெட்டு மற்றும் கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், குறித்த நபரை மீண்டும் கைது செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது இவ்விதமிருக்க, யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் என்ற குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே, கடந்த தினங்களில் அம்மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு காரணமாகின என்று, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆவா குழுவில், சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் அவர்களுக்குப் பின்னால் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றிருந்த நிலையில், திருச்சி பொலிஸாரால் உரிய ஆவணங்கள் இல்லாது திருச்சியில் நடமாடிய குற்றச்சாட்டில், கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் கைதையடுத்து, சன்னா தலைமறைவாகினார். அவருடன் இணைந்த ஏனைய ஆவா குழு உறுப்பினர்களும் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில், ஆவா குழுவில் இரண்டாம் மூன்றாம் நிலை அதிகாரத்தில் இருந்தவர்கள், தாமே ஆவா குழுவினர் என யாழில் நடமாடி, வாள்வெட்டுச் சம்பவங்களை அரங்கேற்றினர். இந்நிலையில், அவர்களுக்கு இடையில் தலைமைத்துவச் சண்டை ஏற்பட்டு, நிஷா விக்டர் தலைமையில் ஒரு குழுவும் தனு தலைமையில் ஒரு குழுவும் என இரு குழுக்களாக, ஆவா குழு பிளவுபட்டது. நிஷா விக்டர் தலைமையிலான குழு டுலஉயn எனவும் தனு தலைமையிலான குழு சுழஒ எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.

இவ்விரு குழுக்களும், தமக்குள் பல தடவைகள் மோதிக்கொண்டுள்ளன. இதையடுத்து, 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் கைதுகளைத் தொடர்ந்து, யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் குழுவுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது தனு ரொக்ஸ் குழுவை இலக்கு வைத்தே தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மற்றும், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் – பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வீச்சுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளார். அவர் பின்னர் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்னால் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை குழுவினருக்கு இடையில் கூட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி காவல்மா அதிபர் இதன்போது கூறியுள்ளார்.

வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்ய யாழ்ப்பாணம் முழுவதும் காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு தொடர் கண்காணிப்புக்கள் இடம்பெறுவதாகவும், சில சந்தேகத்துக்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்தே, நீதிபதி இளஞ்செழியன் வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். நகர பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி பணித்திருந்தார். இதற்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரிகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்தும் இதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

சட்டம் ஒழுங்கை இறுக்கமாகக் கடைப்பிடித்து அனைத்து சந்தேகநபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினருக்கு நீதிபதி இளஞ்செழியன் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார். வாள்வெட்டு வழக்கொன்றில் பிணை மனு கோரப்பட்டபோது அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் பிணை வழங்கக்கூடாது என கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததுடன், கடந்த ஐந்து நாட்களாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்களை மன்றில் பிரஸ்தாபித்திருந்தார்.

மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற இந்த வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் நீதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாள்வெட்டு குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் நீதிபதியிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டுக்கள் யாழ். குடாநாட்டில் பரவலாக இருந்தபோது நீதிமன்றம் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தார். யாழ். குடாநாட்டு மக்களை துன்புறுத்தும் வகையிலான குற்றத்தை இழைத்தவர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மன்னிப்போ பிணையோ வழங்காது என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும், உடனடி நடவடிக்கையில் இறங்கி மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.