தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது.இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பிரிந்து செல்வது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்று இருந்த காலத்தில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் சிறந்ததாக அமைந்திருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்த போது, சில கட்சிகள் கூட்டமைப்பில் சேரவில்லை.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் கூட்டமைப்பில் இருந்த 4 கட்சிகளை தவிர்ந்த வெளியில் இருந்த கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டோம்.
சிலர் எமது கூட்டணியில் இருந்தும் பிரிந்து செயலாற்றி வந்துள்ளார்கள். தற்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த எமது தலைமையோ, தமிழரசுக் கட்சி தலைமையோ எவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தினைக் கொண்டிருக்கவில்லை.