mukaஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. எமர்சன் முனங்காக்வா முன்னர் ராபர்ட் முகாபேயின் முக்கிய கூட்டாளியாக இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென் ஆஃப்ரிக்காவில் இருந்து தப்பி சென்ற எமர்சன் முனங்காக்வா புதன்கிழமை திரும்பி வரவிருப்பதாக ஸானு-பிஎஃப் கட்சி தெரிவித்துள்ளது.

முனங்காக்வாவை பதவி நீக்கம் செய்த நடவடிக்கை, கட்சியையும், ராணுவத்தையும் இந்தப் பிரச்சனையில் தலையிட செய்தது. முகாபேயின் 37 ஆண்டுகால நீண்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இது அமைந்துவிட்டது.
முகாபே பதவி விலகவுள்ள செய்தி பரவியதும், நாடு முழுவதும் இரவிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
93 வயதான அதிபர் முகாபே தாம் பதவி விலகுவதாக அனுப்பிய கடிதம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அதனால், முகாபேயை பதவி நீக்கம் செய்யும் நாடாளுமன்ற நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகார மாற்றம் சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்காக தான் பதவி விலகுவதாகவும், இந்த முடிவை தானே சுயமாக எடுத்ததாகவும் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தில் முகாபே குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற தேர்தல் வரை 71 வயதாகும் முனங்காக்வா நாட்டை ஆள்வார் என்று ஸானு-பிஎ.ப் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.