radcoமுன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள த ஹேக்கிலுள்ள ஐநா தீர்ப்பாயம் ஒன்று, மனித குலம் அறிந்திருக்கும் மிக கொடிய குற்றங்களின் பட்டியலில் இவருடைய குற்றங்கள் இடம்பெறுவதாக கூறியுள்ளது.

7 ஆயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும் சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் பொறுப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சராஜிவோ முற்றுகையின்போது, வேண்டுமென்றே பொது மக்கள் மீது ஷெல் மற்றும் ஸ்னைப்பிங் தாக்குதலை ஜெனரல் மிலாடிச் நடத்தியதாகவும் குற்றம் காணப்பட்டுள்ளார்.
இந்த குற்றங்களை அவர் மறுத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அவருடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கலவையான பதில்கள் வந்துள்ளன. 

மதர்ஸ் ஆஃப் சிரெப்ரெனிகா என்ற குழு, இந்த தீர்ப்பு பாதி திருப்தியை அளிக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால். தனது கணவரையும், போரில் இரண்டு மகன்களையும் பறிக்கொடுத்த ஒரு போஸ்னிய முஸ்லிம் பெண் மிலாடிச்க்கு இன்னும் கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் அவர் செய்த இனப்படுகொலைக்காக இல்லாமல், போஸ்னியா முழுவதும். அவர் செய்த இனப்படுகொலைக்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அச் ஹூசைன் இதனை நியாயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றிருக்கிறார்.