மன்னார் எருக்கலம்பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதான இராசையா குகனேஸ்வரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.15 மணியளவில் எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டையில் உள்ள வீட்டில் இருந்து மேசன் வேலைக்காக மன்னார் நோக்கி சென்றுள்ளார். மன்னாருக்குச் சென்ற தனது கணவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.
அன்று முதல் இன்று வரை அவரது தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக அவரது மனைவி தெரிவித்தார். தனது கணவர் கடந்த 2013 ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டவர் என அவருடைய மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.