svxvcகிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்ப அறிவுறுத்தலுக்கு மாறாக நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு, எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும், அரசியல்வாதிகளே சிந்தியுங்கள், இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில், பரீட்சையிலும் சித்தி, நேர்முக தேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிழக்கு மாகாண சபையினால் வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு மாறான முறையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்திற்கு பொதுவான கொள்கை இருக்கும்போது மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டு மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் ஏனைய மாவட்டங்களில் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்ட நிலையில் அதிகளவிலான புள்ளிகளைப் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 40 புள்ளிகளுக்கு மேல் பெறுவோர் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள் என்று கிழக்கு மாகாண சபையினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர். நேர்முகத் தேர்வு, போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களில் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எந்த அரசியல்வாதிகளும் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பத்தில் வேறு அரச நிறுவனங்களில் நியமனம் பெற்றவர்கள் விண்ணபிக்க முடியாது என்று கோரப்பட்ட போதிலும் பலர் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்திற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்ற அனைவரையும் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.