நாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர்.
வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். அனர்த்தம் காரணமாக இன்னுமொருவரும் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலையை அடுத்து, மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இன்றையதினம் நடத்தவிருந்த இறுதித்தவணைப் பரீட்சைகளை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்தமுல்ல பிரதேச செயலக பிரிவிற்கும் இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர இதனைக் கூறியுள்ளார். இதன்காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாட இடங்களுக்கு நகருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, களனிவெளி, கரையோர மற்றும் மலையகத்துக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய, விமானங்களில் சில, மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மோசமான வானிலையை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை சம்பந்தமாக தேவையற்ற பயத்தை எற்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்வன யாப்பா கூறினார். சில பொய்ப்பிரச்சாரங்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சூறாவளியோ சுனாமி ஏற்படும் வகையில் எதுவித அபாய எச்சரிக்கைகளும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தகட்ட எதிர்வு கூறல் சம்பந்தமாக தொடர்ச்சியான அவதானத்துடன் இருப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார். அதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் சீரற்ற காலநிலை காரணமாக காரை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த மீன் பிடி படகுகளை தேடி கடற்படையின் படகுகள் விரைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்பிடி படகில் 07 மீனவர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வீதிப் போக்குவரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து தெரியப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0777313247 அல்லது 110 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கொழும்பு நகரத்தில் ஏற்படுகின்ற வாகனப் போக்குவரத்து பாதிப்புக்கள் மற்றும் ஏனைய அனர்த்த நிலமைகள் குறித்து தெரியப்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
அதேவேளை தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல பிரதேசங்களில் மின் கம்பங்கள் விழுந்துள்ளதுடன் ட்ரான்ஸ்போம்பர் என்பனவும் செயலிழந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் மண்சரிவு அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்காரணமாக பிரதான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. களனி வெளியில் மார்க்கத்தில் இடம்பெறும் புகையிரத சேவைகள் அவிஸ்ஸாவளை மற்றும் கொட்டாவ பகுதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மலையக பகுதிக்கான பிரதான புகையிரத சேவைகள் பதுளையில் இருந்து நானுஓயா வரை மாத்திரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும், சென்னை மற்றும் பெங்களுரில் இருந்து இலங்கை வந்த இரண்டு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திரும்பியனுப்பப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வந்த யு.எல்.124 மற்றும் பெங்களுரில் இருந்து வந்த யு.எல்.172 ஆகிய விமானங்களே இவ்வாறு மத்தளவுக்கு அனுப்பப்பட்டன. கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியனுப்பட்டதாக மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.கடும் மழையின் எதிரொலியாக ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கொத்மலை ஆற்றின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்தமுல்ல பிரதேச செயலக பிரிவிற்கும் இவ்வாறு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.