dfgdfgfgகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மிக விரைவாகத் திறந்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று மேற்கொள்ளப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் அம்பாறை மாவட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், “சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதி பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்”, “அரசியல் கைதிகளை உடனடியான விடுதலை செய்ய வேண்டும்”, “நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான அலுவலகத்தைத் திறந்து, முறையான, நீதியான விசாரணைகள் மேற்கொண்டு, தகுந்த இழப்பீடுகளைப் பாதிக்கப்பட்ட எங்களுக்கு, ஜனாதிபதி வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அகியோரிடம் கையளிக்கும் வகையில், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் அம்பாறை மாவட்ட அமைப்பின் சார்பில் செல்வராசா செல்வராணியால், மகஜர்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.