தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடும் நோக்கிலேயே இந்த செயற்குழுவின் விஜயம் அமையவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் இந்த விசேட நிபுணர்கள் பொலிஸ் நிலையங்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். மேல் மாகாண வட மத்திய மாகாணம் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் விசேட செயலணி விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளது.
அரச அதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் இலங்கை விஜயம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.