BN-WI814_nkcycl_SOC_20171129064141வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா. வின் எச்சரிக்கை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அண்மைக்காலமாக அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஐ. நா. வின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் மற்றும் அதிநவீன ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவதற்கு வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பொருளாதாரத் தடைகள் வட கொரியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவை அடையும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்றுக்காலை அந்நாடு பரீட்சித்திருந்தது. முன்னர் எப்போதும் பரீட்சிக்காத வகையில் குறித்த ஏவுகணை அதியுயர் சக்தி வாய்ந்தது என வட கொரியா குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே வட கொரியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சீனாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை இணைத்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.