sddfdசீரற்ற வானிலை காரணமாக 55,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில் 14 ,617 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 8 பேர் காணாமற்போயுள்ளனர். இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 7 பேர் சீரற்ற வானிலையால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பதுளை மற்றும் பண்டாரவளையைச் சேர்ந்த 02 பேரும், ஹிக்கடுவ மற்றும் அம்பலங்கொட பகுதிகளைச் சேர்ந்த 4 பேரும் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 430 வீடுகள் முழுமையாகவும் 11,597 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதிகம் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள 3279 பேர் 11 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் 117 என்ற இடர் முகாமைத்துவ நிலையத்தின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, 011 267 000 2 என்ற இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும். சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் அநேகமான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

மலையகத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது. மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மார்க்கங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையாலும், கற்பாறைகள் சரிவதாலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இதேவேளை காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் ஹிக்கடுவ, கொடகம கடற்பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மீனவர்கள் இருவரும் கடந்த 29ஆம் திகதி இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் குறித்த மீனவர்களையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்ததையடுத்து இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது இவ்விதமிருக்க புஸ்ஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டம், ஓ.ஆர்.சி பிரிவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, மின்சார விநியோகக் கம்பி அறுந்து விழுந்ததில், 28 வயது இளைஞர் பலியாகியுள்ளார். மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த “கலு” என்று அழைக்கப்படும் எஸ்.அருணசாந்த என்ற இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக புஸ்ஸல்லாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கம்புருபிட்டிய பலோல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றின்மீது மண் மேடு சரிந்து வீழந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் வசித்து வந்த 72 வயதான வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அவரது மனைவியும் காயமடைந்து மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் தற்போது மாத்தறை மருத்துமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றும் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளமையால் அதனை அண்மித்துள்ள பிரதேச மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையால், காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா மற்றும் ஹட்டன் ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது. காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம், இன்னும் 4 அடிகள் மாத்திரமே உச்சமட்டத்தை அடைய உள்ளமையால் காரையோர மக்களும் காசல்ரீ ஓயா பகுதிகளைச் சேர்ந்த ஒஸ்போன், நோட்டன் ஆத்தடி, கிளவட்டன் பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை மாத்தறை ஹெலியகந்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் மாத்தறை – கதிர்காமம் கடற்கரை வீதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாத்தறையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் வாகனங்களை மாத்தறை மெத்தவத்தை ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் ஹெலியகந்த பகுதியில் உள்ள மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்துள்ளது. இதன்போது குறித்த வீதியில் வாகனங்கள் பயணித்துள்ள போதிலும் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை பார்வையிட தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் குறித்த இடத்துக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருவதன் காரணமாக மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்டாரவளை தொடக்கம் ஒஹிய இடையிலான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கொழும்பு தொடக்கம் நாணுஓயா வரை மாத்திரம் மலையக ரயில் சேவை இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது தொடர்பாக உடனடியாக தகவல் தருமாறு, உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதற்காக, 1902 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு, அமைச்சர் குறிப்பிட்டார்.

அனர்த்தங்களால் தமக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டு இருக்குமாயின், பொதுமக்கள் உடனடியாக, கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போது தான், நிவாரணச் சேவைகள் உடனடியாக வழங்கப்படும். இழப்பீட்டையும் உடனடியாக வழங்க, அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுப்பதற்காக ஒன்பது கடற்படை குழுக்கள், 4 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை மேலும் 50 கடற்படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.