sfdfdfமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்றுமாலை 4 மணியளவில் காணாமல் போனதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, மடு பூமலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட மடு 3 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மடு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்த நிலையில் மடு பொலிஸார் சடலத்தை சென்று பார்வையிட்டனர்.

குறித்த சடலத்தை பார்வையிட்ட காணாமல்போன குடும்பஸ்தரின் உறவினர்கள், காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மடு பொலிஸார், கிராம அலுவலகர் மற்றும் விசேட தடயவியில் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.