இலட்சியத்துக்காக கொள்கை ரீதியில் ஒன்றுபட்டு பயணிக்கும் நாம், பதவிக்காக த.தே.கூட்டமைப்பை விட்டு விலகப்போவதில்லை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டு விடயம் தொடர்பாக இன்னமும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவில்லை. மீண்டும் கலந்துரையாடும்பொழுது அது தொடர்பாக ஒரு சுமுகமான முடிவுக்கு வரமுடியும் என நம்புகிறேன். எம்மை பொறுத்தமட்டில் அரசியல் கட்சி என்ற ரீதியில் தேர்தலின்போது ஆசனங்கள், தலைமைத்துவம் எடுப்பது முக்கியமான விடயம் என்று எமக்கு தெரியும். ஆனால் அது மட்டும் தான் முக்கியம் என்று நாம் அரசியலில் ஈடுபட முடியாது. எம்மை பொறுத்த வரையில் நாம் ஒரு இலட்சியத்துக்காக, கொள்கை ரீதியில் கூட்டாக இணைந்து அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இந்த நிலையில் பதவிக்காக கட்சியை உடைத்தோம் என்ற ஒரு நிலை எமது கட்சி சார்பாக ஒருபோதும் வராது. எமக்கும் த.தே. கூட்டமைப்புக்குள்ளும் ஒரு உடைவு வருவதாக இருந்தால் அது கொள்கை ரீதியான உடைவாக தான் இருக்கும். கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிளவு ஏற்படும் என்பதில் உறுதியாகவுள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் பக்குவமாகவும் நிதானமாகவும் இருந்து நடக்கும் விடயங்களை அவதானித்துக் கொண்டு இருக்கிறோம் என மேலும் தெரிவித்தார். (நன்றி – வலம்புரி 08.12.2017)