விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் புலிக்கொடியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்தால் தெற்கிலிருந்து நல்லிணக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுக்களின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் இனவாதத்தை தூண்டுவது தவறான விடயமாகும்.
பொதுமக்களின் காணிகளில் விவசாயம், கீரை வளர்த்தல், வாழைத்தோட்டம் செய்வதல்ல இராணுவத்தின் வேலை. தேசிய பாதுகாப்புக்குத் தேவையான காணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யுத்தத்தின் போது பொதுமக்கள் மற்றும் அரசின் காணிகளை விடுதலைப்புலிகள் கைப்பற்றி வைத்திருந்தனர். இன்று இராணுவத்தை வெளியேறுமாறு கூறும் மக்கள் அன்று புலிகளை வெளியேறுமாறு கூறவில்லை.
இராணுவத்தினர் பொதுமக்களின் 5,128 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளனர். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத இடங்களை இராணுவம் விரைவாக மக்களிடம் கையளிக்க வேண்டும்.
பத்து மீன்பிடித் துறைமுகங்களை அரசு குத்தகைக்கு வழங்க தயாராகி வருகிறது. யுத்தத்தின் போது அதியுச்ச பாதுகாப்பு தேவைப்பட்ட அண்மித்த இடங்களில் தான் இந்த மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் எதனையும் பாராது உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த மீன்பிடித் துறைமுகங்களை கொடுக்கின்றனர். ஆனால், சிறிய மனிதர்களின் காணிப் பிரச்சினை என்று வந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பிலான கதைகளை கூறுகின்றீர்கள்.
அனைத்து இனங்களுக்குமான சமவுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன், சமவுரிமை கிடைக்கவும் வேண்டும். இனங்களின் அடிப்படையில் தேசிய பிரச்சினையை தீர்க்க முற்பட்டால் ஒருபோதும் தீர்வுகாண முடியாது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமைய ஒழித்து அனைத்து இனங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பொன்றை கொண்டுவராவிடின், வடக்கின் இனவாதிகள் அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்துவார்கள்.
வடக்கின் நல்லிணக்க முயற்சிகளை விடுதலைப்புலிகளைப் போன்று எடுத்துக்கொள்ள முற்பட்டால் தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் மிகப் பெரிய பிழையாக அது அமையும்.
புலிக்கொடியை தூக்கிக்கொண்டு போய் சிங்கள, முஸ்லிம் மக்களிடம் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள முடியாது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும் கேக் வெட்டச் செல்லும் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்றோர் புலிக்கொடியை தூக்கிக்கொண்டுவந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது.
யுத்தத்தின் பின்னர் தான் அவர்களும் வடக்கிற்குச் சென்றனர். சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் இனவாதம் என்பது தவறான விடயமாகும் என்றார்.