புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அத்துடன், இன்று ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் தமது புதிய கூட்டணியுடன் இணைய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈரோஸ் அம்பாறையில் திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற இடங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலையின் பல பிரதேச சபைகளிலும் வன்னியிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டுக் கோப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளதாக கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அண்மையில் ஊடக செய்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சில கருத்து முரண்பாடுகள் உள்ளது. அது தற்போது உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது. தேர்தலுக்கு பின் தேசிய அரசாங்கம் உடையுமாயின் ஐதேக தனித்து நின்று ஆட்சியமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நல்கியிருந்தார்கள் என்றும் அவ்வாறான நிலை ஏற்படுமாயின் பூரண ஆதரவளிப்போம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியுள்ளார். எனவே, கூட்டமைப்பு ஒருமித்து இருந்தால் தான் ரணில் ஆட்சியமைக்க வேண்டி ஏற்பட்டால் அது சாதகமாக அமையும். அவ்வாறு இல்லையாயின் கூட்டமைப்பு பிரிந்தால் அது தனக்கு (ரணிலுக்கு) பாதிப்பாக அமையும் எனபது அவரது கருத்து.

தமிழரசு கட்சி பற்றி சில விமர்சனங்கள் இருந்து வந்துள்ளது அரசுடன் பேச்சுவார்த்தைக்கு போக முன் சில நிபந்தனைகளை விதித்து அதற்கு உடன்பட்டால் ஆதரவளிக்கும் நிலைப்பாடே காணப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்பட்டது. வரவு செலவு திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கப்பட்டது. புதிய அரசாங்கம் வந்தால் ஆதரவளிப்போம் எனவும் கூறப்படுகிறது. எனவே தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்து போகின்றன.

புதிய அரசாங்கம் வரலாம் வராமல் போகலாம் ஆனால் அவ்வாறன சந்தரப்பத்தில் நின்று, நிதானித்து அரசாங்கத்திற்கு ஆதவளிக்கலாமா எவ்வாறான விடயங்களை நிறைவேற்றினால் ஆதரவளிக்கலாம் என தௌிவுபடுத்திக் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இனப் பிரச்சினைக்கான தீர்வை ஒரு புறம் வைத்து விட்டு பார்த்தாலும், காணாமல் போனோர் போராட்டம், கைதிகளின் போராட்டம் எதனை பற்றியும் பேச முயற்சிக்காமல், இவர்களின் அரசியல் நகர்வுகள் மேலெலுந்த வாரியாக காணப்படுகின்றது.

நாங்கள் இராணுவம் வௌியேற வேண்டும் என போராடி வருகிறோம், இராணுவம் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளோம், ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் இராணுவத்திற்கு அதிகரித்த அளவில் ஒதிக்கீடுகள் வழங்கப்படுகின்றன,

ஆரம்பத்திலே இதனை எதிர்க்க வேண்டும் என கூறியிருந்ததோம், ஆனால் அதற்கு கூட கூட்டமைப்பு தயாராக இல்லை, மேலும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது எனினும், சிவசக்தி ஆனந்தன் தவிர்த்து கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. இது ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் அல்லது கவலைக்கு உள்ளாக்கும் செயலாகும்.

மீண்டும் சுமந்திரன் போராளிகளை கொச்சைப்படுத்தும் கதைகளை நிறுத்தி தமிழர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க ஏதேனும் செய்ய முடியுமாயின் செய்ய வேண்டும். அல்லது விலத்தியிருப்பதே தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவையாக இருக்கும் என நான் கருதுகிறேன் என்றார்.