ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர்கள் வசம் இருந்து நான்கு வாள்கள், மோட்டார் சைக்கிள்கள் நான்கு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கொள்ளை மற்றும் நபர்களை அச்சுறுத்திய சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 21 மற்றும் 17 வயதானவர்களாகும். இதேவேளை, இன்னும் மூன்று சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட நபர்களை இன்று யாழ் – மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.