இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.இந்நிலையில், அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) பகல் 3 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில்,ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்திலும் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. ராகுலின் வேட்புமனுவில் உள்ள விவரங்கள் அனைத்தும் முறையாக இருந்ததால் தலைவராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் அதிகாரியான வேட்பாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது: “ராகுல்காந்தியின் பெயரில் 89 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்துமே செல்லும். ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவதால், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று அறிவித்தார்