ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் தெளிவாக தெரியக்கூடிய விண்கல் மழையை இன்றிரவு (புதன்கிழமை) காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 முதல் 17ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில் பெய்கின்ற ஜேம்னிட் என்ற விண்கல் மழையை இன்று இரவு (13-12-2017) கண்களால் நேரடியாக பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு பெய்கின்ற விண்கல் மழையை இலங்கையில் மிகவும் தெளிவாக காண்பதற்கு வாய்ப்புள்ளதாக சந்தன ஜயரத்ன தெரிவித்திருக்கிறார்.
வானம் தெளிவாக தெரியக்கூடிய இடத்திலிருந்து இன்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் கிழக்கு நோக்கி வான்வெளியை பார்வையிட்டால், இந்த விண்கல் மழையை பார்க்கக்கூடிய வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 2 முதல் 4 மணி வரையும் இந்த விண்கல் மழையை மீண்டும் பார்க்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.
ஒரு மணிநேரத்திற்கு 120 வரையிலான விண்கற்கள் பூமியை நோக்கி விழும் என தெரிவித்த அவர், இதனை கண்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் எதுவும் அணியாமல் பார்வையிட முடியும் எனவும் கூறியுள்ளார்.
இந்த விண்கற்கள் வெள்ளை, கறுப்பு, பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் பூமியை நோக்கி விழும் என அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.