பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர்.
ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது.இந்த நிலையை போக்கக் கோரி பல தசாப்தங்களாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்ததுக்கு பிரதிபலனாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படுள்ளது என்பது இனிப்பான செய்தியாகும். இந்த முறை பெண்களை அரசியலில் உள்ளீர்த்து கொள்ள கொண்டு வரப்பட்ட உந்துதல் ஆகும். இது சில தசாப்தத்தின் பின் தேவைப்படாது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த சகல அரசியல் கட்சிகளுக்கும் எதிர் வரும் ஆண்டு மாசி மாதத்தில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு சிறந்த வாய்ப்பாகும். களத்தில் குதிப்பதற்கு பல பெண்கள் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கும் காலமிது.
பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்?
இருந்த போதும் அரசியலில் பெண்களின் பங்களிப்பானது ஏன் முக்கியம் என்பது பலருக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையை எடுத்துகொண்டால் நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல்(52%) பெண்களாகவே காணப்படுகின்றனர்.
ஆகவே ஆண்களைப்போல் பெண்களும் வேறுபட்ட தேவைகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டிருப்பதால் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த சகல தீர்மானம் எடுக்கும் மட்டங்களிலும் பெண்கள் அரசியல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நளினி ரத்னராஜா
பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்