புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட பூக்குளம் மீனவக் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பலவற்றை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நான்கு தலைமுறைகளாக, தமது பூர்வீகக் கிராமத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். வில்பத்துக் காட்டின் எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தில், 61 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள குளம் ஒன்றிலிருந்தே குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர். வரட்சியான காலப்பகுதியில் குளம் வற்றிவிடுவதால், சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, அந்த மீனவக் கிராமத்துக்கு மின்சாரத்தைப் பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை காலமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.