யாழ். காரைநகர் மடத்துவெளி மாதிரிக் கிராமத்தை, கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையால், அப்பகுதிக்குக் கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள், சங்கானை, அராலி வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், மாவட்டத்துக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றது. யாழ். மாவட்டத்துக்கான வீட்டுத் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற 24 வீட்டு திட்டத்தையும், காரைநகர் மடத்துவளவு மாதிரிக் கிராமத்துக்கு வழங்குவதற்கு, அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.இந்நிலையில், குறித்த மாதிரி கிராமம் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள 126 ஏக்கர் காணியை, கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்துள்ளனர். அதில், மடத்துவளவு மாதிரிக் கிராமத்துக்குச் சொந்தமான 6 ஏக்கர் காணியையும் கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்து உள்ளனர்.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளைச் சுற்றி, புதிய முள்வேலிகளை கடற்படையினர் அமைத்துள்ளனர். இந்நிலையில், இந்த வருட இறுதிக்குள் வீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தமையால், காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு கிடைக்கப் பெற்ற 24 வீட்டுத் திட்டத்தையும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அராலி, வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளன.