ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த இரண்டு அரச வங்கிகளும் அவதான நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியின் பின்னர் விமான நிறுவன நட்டத்தை ஈடுசெய்ய பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் எஞ்சியுள்ள மூன்று மாற்றுத்திட்டங்கள் தொடர்பில் அஜித் டயஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், இணை பங்காளர் மூலம் விமான நிறுவனத்தை செயற்றிறனுடையதாக மாற்றுவதற்கு அதனை மீள் புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான பங்காளரைப் பெற்றுக்கொள்ள முடியாவிடின், அரச நிதி வகுப்பாளர்களினால் தமது செயற்பாடுகளை இந்த நிறுவனத்தின் மூலமாகவே முகாமைத்துவம் செய்ய முடியுமான வகையில் மீள் புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு மாற்றுத் திட்டங்களும் வெற்றியளிக்காத பட்சத்தில், ஸ்ரீலங்கன்; விமான நிறுவனத்தை மூடி விட வேண்டி ஏற்படும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு மீள் புதுப்பிக்கும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அவர்கள் தற்போது ஆரம்ப ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 20ஆம் திகதியாகும் போது முதல் அறிக்கையைத் தயாரிக்க முடியும் என ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக மீள் புதுப்பித்தல் செயற்பாட்டினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச நிறுவனம் ஒன்றிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்வுகளுக்கு ஏற்ப 2016 மற்றும் 2017 நிதி ஆண்டுகளில் 28 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் நாளாந்த செலவுகளை ஈடு செய்ய அரச வங்கி மூலம் 7.5 பில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக்கொள்கின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவரின் கடிதத்திற்கு ஸ்ரீலங்கன்; விமான நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் கடிதம் ஒன்றின் மூலம் பதில் வழங்கியுள்ளது. ஆலோசனை பெறும் நிறுவனத்திடம் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு மீள் புதுப்பிக்கும் செயற்பாட்டினை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு விமான நிறுவனத்தை பிரதான தலைப்பாகப் பயன்படுத்தினாலும் அங்கு இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் எவ்வித நடவடிக்கையும எடுக்கப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய பணிப்பாளர் சபையின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டும் தொழிற்சங்கம், தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு வியாபார முகாமைத்துவம் தொடர்பில் எவ்வித அனுபவமும் இல்லை என கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும் தகைமை அவருக்கு இல்லை எனவும் கடந்த மூன்று வருடங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு அதன் தலைவர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஸ்ரீலங்கன் விமான நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.