முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருக்கும் காணியில் உள்ள கிணற்றில் இருந்து சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிணற்றில் இருந்து இரண்டு கிரனைட் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அவை வெடித்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. ஆகவே, இறுதி யுத்தக்களமான இப்பகுதியில் மீண்டும் ஒரு தடவை வெடிபொருள் அகற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெடிபொருட்களை அறியாத சிறுவர்கள் அவற்றை விளையாட்டுப் பொருளென நினைத்துக் கையாண்டபோது வெடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவிக்கையில், வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளிலேயே மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கிணறுகளில் வெடிபொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.