இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்ததால் அங்கு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கமானது இந்தோனேஷியாவின் ஜாவா தீவை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் தாக்கியுள்ளதாகவும் இது 6.5 ரிச்சடர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவுக்கு 200 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் ஓடியதால் வீதியெங்கும் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்போது 40க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து விழுந்துள்ளதாகவும் 65 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறித்த தீவின் 91 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.