நாட்டு மக்கள் கண்ணியமாக வாழ்வதற்காக தாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி உறுதிபூண்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு உண்மையான கருத்து சுதந்திரம் கிடைக்கவில்லை என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மிகவும் எளிமையான முறையில் பதவிப்பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சியின் 87 ஆவது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகள் பணியாற்றிய சோனியா காந்திக்கு இதன்போது நினைவுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உயரத்தை எட்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். புதிய தலைவரின் பதவியேற்பை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.