இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய ரஷ்யா எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட, மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று அடுத்தவாரம் ரஷ்யா பயணமாக உள்ளது. ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரே இந்தக் குழுவில் அடங்குகின்றனர். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையில், ஒருவகை வண்டு இனம் இனங்காணப்பட்டமையே இந்தத் தடை விதிப்பதற்கான காரணம் என ரொய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது. இந்தத் தடையானது நாளைமுதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கவும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் குழு ரஷ்யா செல்லவுள்ளது. இலங்கையின் தேயிலையில், 23 வீதத்தை ரஷ்யா இறக்குமதி செய்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் கடந்த 10 மாத காலப்பகுதியில், இலங்கையிலிருந்து 41 ஆயிரத்து 300 லட்சம் தொன் தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. இதனூடாக, இலங்கைக்கு 436 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.