வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. “கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி” எனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் இளைஞரணியின் செயற்றிட்டத்தின் ஊடான ஒருபகுதி அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்களுக்கு கையளித்தார்.

இவ் நிகழ்வில் வவுனியா வடக்கு கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ரகுபதி, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், ஐயனார் விளையாட்டுக்கழக தலைவர் திரு பே.அனோஜன், நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி ந.சோதிமதி, சிவில் பாதுகாப்பு குழு செயலாளர் திரு சோதிநாதன், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கணேஷ், திருநாவற்குளம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.