மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் மலேசியப் பிரதமரை வரவேற்பதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அத்துடன் இந்த சந்திப்பை அடுத்து இரு நாட்டு தலைவர்களும் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகள் தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.