தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 1.4 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

முதன் முறையாக வெளிநாடு வாழ் சிலியர்களுக்கும் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழமைவாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான செபாஸ்டியன் பினரா மற்றும் சோசியலிச கட்சியைச் சேர்ந்த அலேஜாந்த்ரோ கைலியர் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், 54 சதவிகித வாக்குகள் பினராவுக்கு பதிவாகின. இதனால், நான்கு ஆண்டுகள் கால இடைவேளைக்கு பின்னர் அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்லேட்டின் பின்னணியில் அலேஜாந்த்ரோ இருந்த நிலையில், இம்முறை அவர் நேரடியாக களமிறங்கி தோல்வியை தழுவியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கியூபா, ஈக்வேடார், ஹோண்டுராஸ், உருகுவே மற்றும் பாராகுவே ஆகிய நாடுகளில் இடதுசாரிகளே ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக அர்ஜெண்டினா, பிரேசில், பாராகுவே மற்றும் வெனிசுலாவில் பழமைவாதிகள் ஆட்சியை பிடிக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.