இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையை உலக சோஷலிசத்துக்கான அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தக் கொள்கையை ஏற்கனவே பல்வேறு நாடுகளும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன. அண்மையில் இந்தக் கொள்கையை ஒரு வருடத்துக்குள் மாற்ற அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவையினது விசேட குழுவொன்று வலியுறுத்தியிருந்தது. அதேநேரம், மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதிலிகளை அவுஸ்திரேலியா பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான விடயங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியா அங்கத்துவம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றுக்கு மத்தியில் கடந்த தினம் இலங்கையைச் சேர்ந்த 29 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியிருந்தது. இலங்கையில் தமிழ் ஏதிலிகள் துன்புறுத்தல் மற்றும் உயிர் அச்சுறுத்தலை முகங்கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

அண்மையில், அசோசியேட் பிரஸ் இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் ஏதிலிகள் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்திருந்தது. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏதிலிகள் தொடர்பில் பின்பற்றும் கொள்கையானது, கடும்போக்கானது எனவும் உலக சோஷலிசத்துக்கான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.