யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 98 சதவீதமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் மாற்றல் மீதான தடை மற்றும் அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனத்தின் அரசு தரப்பினரின் 16ஆவது கூட்டம் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் அறிக்கையை முன்வைத்த ஒஸ்ட்ரியாவுக்கான தூதுவர் எச்.ஈ. ப்ரியாணி விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். பங்காளர் நாடுகளும், கொடையாளிகள், ஐ.நா மற்றும் அரச சார்ப்பற்ற அமைப்புகளின் உதவிகளின் ஊடாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் இலங்கையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. 2005ம் ஆண்டுக்கு பின் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் அமைதியான ஸ்திரமான சமரசமிக்க மற்றும் வளமான தேசத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒற்றுமையை அரசாங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

இம்முயற்சியில் மீள்குடியேற்றம், வாழ்வாதாரங்களை மீள் உருவாக்கல், பொருளாதார மேம்பாடு அபிவிருத்தி மற்றும் இன முரண்பாடுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நாதனங்களுக்கும் எதிர்காலத்தில் இடமளிக்கப்போவதில்லை எனவும் ப்ரியாணி விஜேசேகர கூறியுள்ளார்.