248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளன. இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் போட்டியிடுவதாக, அண்ணளவாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்றுடன் நிறைவடைந்த வேட்புமனுக்களில் எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள், இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன. முதல் கட்டத்தில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் இரண்டாவது கட்டத்தில் 248 மன்றங்களுக்காகவும், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதற்கமைய, 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணி, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் நிறைவடைந்துள்ளது. பிரதான கட்சிகளும் சுயேட்சை குழுக்களும், நாடாளாவிய ரீதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், மாவட்ட செயலகங்களில் வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பிரதான நகரங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சில இடங்களில் விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாளான நேற்றையதினம் மட்டும், 15,000 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறிப்பாக, காலி, கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட மாவட்ட செயலகங்களில், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் சிவில் உடைதரித்த பொலிஸ் புலனாய்வாளர்களும், கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட செயலகங்களுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வந்தபோது, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வோர் பயணம்செய்த வாகனங்கள் மட்டும் உட்செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஏனைய வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, வெளியில் நிறுத்தப்பட்டன. அத்தோடு, உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், நேற்றைய தினத்தில், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களுக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டது. அதன் நிமிர்த்தம், கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்கு மத்திய நிலையங்களாகச் செயற்பட்ட பாடசாலைகளுக்கு அருகிலும் பொலிஸ் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை, வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் தினம் நிறைவடைந்துள்ளதால், 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகள் இன்றையதினம் முதல் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.