அரசியல் அந்தஸ்து கோரிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்திய விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட இலங்கையர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அவரது பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அந்த உயர்ஸ்தானிகராலயம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, அவர் அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என தெரிவித்திருந்ததுடன், பாதுகாப்பு குறித்து விண்ணப்பிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அகதிகளுக்கான தூதுவராலயம் கோரியிருந்தது. ஆனால், அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படாமல், பலவந்தமாக கைவிலங்கிடப்பட்ட நிலையில், அவர், வில்லாவுட் தடுப்பு முகாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இலங்கை அகதி, குறிப்பிட்ட காலப்பகுதியினுள், பாதுகாப்பு தொடர்பான மனுவை தாக்கல் செய்ய தவறியதனாலேயே நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கூற்றை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள சட்டவல்லுனர்கள், அந்த அகதி நம்பகமான தகுதியை பெற்றிருந்தார் என்பதை கருத்திற்கொள்ள ஆஸி தவறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.