யாழ் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்குவதாக இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாவட்ட செயலகத்தில் இச்சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபர் இதன்போது இராணுணவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் பல காணிகள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைக் கட்டிடங்கள் போன்றவற்றையும் விரைவில் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் அரச அதிபர் கோரிக்கை விடுத்தார். இவ்விடயம் தொடரிப்ல தாம் சாதகமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக இராணுவத்தளபதி தெரிவித்ததாக யாழ் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.