போதைப்பொருள் கடத்தலில் முக்கியமானதொரு கேந்திர நிலையமாக இலங்கை உள்ளதென தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா முதலான நாடுகளிலிருந்து கடத்தல்மூலம் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள், கொழும்பு மற்றம் மாலே ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் பிரபல ஹெரோயின் வகையாகிய பிறவுன் சுகர் பிரதானமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா முதலான நாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல்கள் மற்றும் விசாரணைகள் தொடர்பான தகவல்களில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 186 வெளிநாட்டவர்கள் போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 58 பேர் இந்தியர்களாவர். இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேஷிய முதலான நாடுகளில் வைத்து போதைப்பொருட்களை கடத்த முயற்சித்த 5 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது