D.Sithadtham M.P

வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வேட்பாளர்களிடம் காணப்பட்டமையே தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சிக்கு முரண்பாடு ஏற்பட பிரதான காரணம் என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.

பல தரப்பினர் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவீதத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டார். செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

 கேள்வி: உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, உறுப்பினர் ஒதுக்கீடு தொடர்பில் புளொட் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இதன் உண்மை என்ன?
பதில்: உண்மை நிலை என்னவெனில் நாங்கள் கொழும்பில் கதைத்து தலைமைப்பீடத்துக்குள் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் அல்லது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கதைத்து இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம். அதாவது எத்தனை உள்ளூராட்சி சபைகளுக்கு எங்களது தலைவர்களை நியமிப்பது, என்ன வீதத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது போன்ற விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் தமிழரசுக் கட்சி அந்த ஒப்பந்தங்களில் பல மாற்றங்களைச் செய்தது. அந்த மாற்றங்கள் குறித்து எம்மிடம் அவர்கள் கேட்கவில்லை. ஆனால் மாற்றம் செய்துள்ளோம் என்று சொன்னார்கள். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை ஏற்க முடியாது என நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினோம்.
இதற்கான காரணம் என்னவென்றால், எமது பக்கத்தில் உள்ள அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும், அதேபோல தமிழரசுக் கட்சி பக்கத்தில் அவர்களின் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் தலைமைகளுக்குக் கொடுத்த அழுத்தமாகும்.
நான் இதனை எவ்வாறு பார்க்கின்றேன் என்றால், முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஏன் என்றால் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கேட்பது தான் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் என நினைக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே கொள்கை ரீதியான வித்தியாசம் என்பதைக் காட்டிலும் அழுத்தங்கள் அதிகரித்தன என்பதே தேர்தல் தொடர்பான முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமானது.
எங்களுடைய ஆதரவாளர்களை நாமும், அவர்களுடைய ஆதரவாளர்களை அவர்களும் திருப்திப்படுத்த முயற்சித்தமையே முரண்பாடுகள் வலுக்கக் காரணமாகின.
கேள்வி : அப்படியாயின் சகல பிரச்சினைகளும் தற்பொழுது தீர்க்கப்பட்டு விட்டனவா?
பதில்: பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வேட்பாளர் பட்டியல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும், கிளிநொச்சியில் பிரச்சினை காணப்படுகிறது. கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியினர் எமது வேட்பாளர்களை உள்ளடக்காது வேட்பாளர் பட்டியலைத் தயாரித்துள்ளனர். புளொட் மற்றும் ரெலோவின் வேட்பாளர்கள் எவரும் கிளிநொச்சியின் மூன்று சபைகளுக்குள்ளும் உள்ளடக்கப்படவில்லை.
கேள்வி: நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புதிய கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி, ஈ.பி.டி.பி, ஐ.தே.க, சு.க என பல தரப்பு போட்டிகள் காணப்படுகின்றன. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவுத் தளத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்கள்?
பதில்: ஈ.பி.ஆர்.எல்.எப் தனித்துச் சென்றமை கொஞ்ச வாக்குகளைப் பாதிக்கலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் கடந்த காலத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டி போட்டவர்கள். சிலவேளை சுரேஷால் சிறிய பாதிப்பு வரலாம். இப்படிப் பலபேர் தேர்தலில் போட்டியிடுவது கொஞ்ச வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் குறைக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்புக் குறையாது.
கேள்வி: தேர்தலில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தாதா?
பதில்: இது நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சரியான நடவடிக்கையை தமிழரசுக் கட்சியின் தலைமை எடுக்காவிட்டால் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தங்களுடைய கடசிக்குள் சரியானதொரு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்துவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை தொடர் ந்தும் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.
கேள்வி: இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் புளொட்டின் முன்னாள் அலுவலகமொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டிருந்தன. இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்: அது முன்னர் எங்களுடைய அலுவலகமாக இருந்தது. எனினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல முகாங்களிலும் உள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு நாம் கட்டளையிட்டிருந்தோம். என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், சகல ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பதாகும். இவ்வாறான நிலையில் எப்படி இந்த ஆயுதம் வந்தது என்று எனக்குத் தெரியாது. இது ஏ-47 எனும் பெரிய ஆயுதம் என்பதுடன், புதிய நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தேன். யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகும் நிலையில், அந்த ஆயுதம் எப்படி புதிய நிலையில் இருக்கின்றது என்பது எமக்கு விளங்கவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்ட எமது கட்சியின் முன்னாள் உறுப்பினரும், நீதிமன்றத்தில் கூறியபோது, தான் வெளியில் சென்றிருந்த நேரத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இந்த ஆயுதங்களுக்கும், எமது கட்சிக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை.
கேள்வி: இந்தச் சம்பவம் தேர்தலில் உங்கள் கட்சிக்கான ஆதரவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றீர்களா?
பதில்: நிச்சயமாக இல்லை. ஏனெனில் மக்களுக்குத் தெரியும் நாம் முற்றுமுழுதாக மாறி ஜனநாயகத்தில் இணைந்துள்ளோம் என்று. ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தியவர்கள் என்பதால் இப்படியான சம்பவங்கள் ஏற்படலாம் என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும். 2009ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாக மாறி நாம் முற்றாக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளோம். அதற்கு முன்னரும் ஜனநாயகப் பாதையிலும் பயணித்திருந்தோம். எனவே தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கேள்வி: காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் விவகாரத்தில் தீர்வுகளைக் காண்பதற்கு உரிய அழுத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லையென்ற விமர்சனம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் நடைபெறும் தேர்தலில் எவ்வாறு மக்களை எதிர்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்: மக்கள் விசனமடைந்துள்ளனர் என்பதைவிட, அவ்வாறான பிரசாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். நாங்கள் இவ்வாறான விடயங்களில் அக்கறை எடுக்கவில்லையென்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எங்கள் தலைவர் சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லையென்று கூறமுடியாது. அவர் முழுமையாக அரசியலமைப்பு மாற்றத்திலேயே கூடுதல் அக்கறைகாட்டி வருகின்றார். அதற்காக ஏனைய விடயங்களை கருத்தில் எடுக்கவில்லையெனக் கூறவில்லை. கூட்டமைப்பின் கட்சிகளான நாம் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்த விடயங்களுக்கான அழுத்தங்களைக் கொடுத்தவண்ணமே இருக்கின்றோம். இவை பற்றிய பல போராட்டங்களிலும் பங்குகொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடைபெற்ற சில சந்திப்புக்களில் நான் கலந்துகொண்டிருந்தேன். அந்தக் கூட்டங்களில் நாம் இது விடயங்களில் அழுத்தங்களைக் கொடுத்திருந்தோம். நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்பது சரியான நியாயமாக எமக்குத் தெரியவில்லை.
கேள்வி : அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. வழிநடத்தல் குழுவின் உபகுழுவொன்றின் தலைவராக நீங்கள் இருந்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து.
பதில்: எங்களுடைய உப குழுவின் அறிக்கை தமிழ் புத்திஜீவிகள் மத்தியிலும், மாற்று அரசியல் கட்சிகளாலும் பாராட்டப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்த அறிக்கை மாத்திரம் தீர்மானிப்பாக அமையாது. சிங்களத் தலைமைகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது.
என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்று கேட்டால், எங்கள் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் அரசியலமைப்பொன்று கிடைக்கும் என நாம் நம்பவில்லை. ஆனாலும், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய கட்டாயமான நிலையில் இருக்கின்றோம். ஏன் என்றால் ஐ.நா தீர்மானத்தில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களுக்கு அப்பால் அரசியலமைப்பு தீர்வும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தம் இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காணப்படுகிறது.
அதேநேரம், அரசியலமைப்பு நடவடிக்கைகளை நாங்களே குழப்பிவிட்டு வெளியேறி வந்தால் அது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அவர்கள் நிச்சயமாக என்ன செய்வார்கள் என்றால் இதையொரு சாக்காக வைத்து அரசியலமைப்பு தயாரிப்பு விடயத்தைக் குழப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அப்படியான நிலை ஏற்பட்டால் மீண்டும் நாம் சர்வதேச சமூகத்திடம் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுவிடும். 
நேர்காணல் -: மகேஸ்வரன் பிரசாத்  –  (நன்றி – தினகரன் 24.12.2017)