வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருவியம் அருந்தராசா என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.குறித்த வர்த்தகரை முன்தினம் இரவு முதல் காணவில்லை என்று கடந்த 20ம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகரின் சகோதரரான விஜேரத்னம் பொன்னம்பலம் என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதிலும் காணாமல் போன வர்த்தகர் தொடர்பான தகவல்கள் எதுவும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற காணாமல் போயிருந்த அருந்தராசா என்ற நபர், தன்னை மூன்று பேர் பலாத்காரமாக கடத்திச் சென்று கிளிநொச்சி பளை பிரதேசத்தில் தடுத்து வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடத்திச் சென்றவர்கள் தன்னை அச்சுறுத்தி இலட்சக் கணக்கில் கப்பம் கேட்டதாகவும், அந்தக் கப்பத் தொகையை பலமுறைகள் குறைத்துக் கொண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இறுதியில் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் குறித்த ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கடத்தல்காரர்களிடம் கூறி தந்திரமாக செயற்பட்டு தப்பித்து வந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ள கடத்தப்பட்ட வர்த்தகர், கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளார்.

வர்த்தகரிடம் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில் செயற்பட்ட வவுனியா பொலிஸார் சந்தேகநபர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்